இந்தியாவிலும் உற்பத்தியாகும் கூகுள் போன்…
கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் லாபம் பார்க்கும் நிறுவனமாக திகழ்ந்தாலும்,செல்போன் உற்பத்தியும் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் புதிய பிக்சல் 8 ரக போன்கள் இந்தியாவில் விரைவில் தயாராகும் என்றும்,இந்தியாவில் குறிப்பிட்ட செல்போன்கள் 2024ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. பிக்சல் ரக போன்கள் இந்தியாவின் முக்கியமான சந்தை என்று கூகுளின் ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்துள்ளார். கூகுள் ஃபார் இந்தியா என்ற பெயரில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கூகுள் நிறுவனமும் தனது செல்போன்களை இந்தியாவில் தயாரிப்பதாக கூறியிருப்பது உலகளவில் மிகமுக்கிய கவனம் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 7பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உற்பத்தியை இந்தியாவில் செய்து வருகிறது. ஏற்கனவே தென்கொரிய நிறுவனமான சாம்சங், சீன செல்போன் நிறுவனமான ஷாவ்மி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளன. உலகிலேயே அதிக செல்போன்களை உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடு என்ற பட்டியலில் இந்தியா இருக்கிறது. 2023ஆம் ஆண்டில் மட்டும் 22%செல்போன்களை இந்தியா ஏற்றுமதி செய்ய இருக்கிறது.45,000கோடி ரூபாய் அளவுக்கு ஏற்கனவே செல்போன்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து 1.2லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 24 நிதியாண்டில் செல்போன் ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மட்டும் 50%க்கும் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.