ஜிஎஸ்டி : புகையிலை நிறுவனங்களுக்கு சிக்கல்?
ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஐ.டி.சி, புகையிலை நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. புகையிலைப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 40% ஆக அரசு உயர்த்தினால், ஏற்கனவே உள்ள செஸ் வரியைச் சரிசெய்யாமல், சிகரெட் தயாரிப்பாளர்கள் மீண்டும் விற்பனை நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் மதிப்பீடுகளின்படி, தற்போதுள்ள செஸ் வரியுடன் சேர்த்து 40% வரி விதிக்கப்பட்டால், ஐ.டி.சி மீதான மொத்த வரிச்சுமை 9-10% அதிகரிக்கும்.
இதேபோன்ற பாதிப்பு கோவிட்-19 ஊரடங்கின்போதும் ஏற்பட்டது. அப்போது, சுகாதாரக் கவலைகள், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நுகர்வு சரிந்தது. பின்னர், தேவை மீண்டும் சீரானது. தற்போது ஐ.டி.சி நிறுவனம், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து ஆரோக்கியமாகத் தெரிகிறது.
தற்போது, சிகரெட்டுகளுக்குப் பல அடுக்கு வரி விதிப்பு: 28% ஜி.எஸ்.டி., 5-36% வரையிலான மாறுபடும் செஸ் வரி, இது சில்லறை விலையில் 15-26% ஆக உள்ளது. இதற்கு மேல், ஒரு சிகரெட்டுக்கு ₹2.1 முதல் ₹4.2 வரையிலான குறிப்பிட்ட வரி விதிக்கப்படுகிறது.
அப்படி நடந்தால், மொத்த வரிச்சுமை சில்லறை விலையில் 48-55% ஆக இருந்து 26% ஆக குறையக்கூடும். ஆனால், புகையிலை “தீங்கு விளைவிக்கும் பொருள்” எனக் கருதப்படுவதால், இது வரிச்சுமையை குறைக்காமல், மாறாக நியூட்ரலாக அல்லது சற்று அதிகமாகவே இருக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், வி.எஸ்.டி. இண்டஸ்ட்ரீஸ் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகத் தெரிகிறது. ஏனெனில், ஜூன் காலாண்டில் அதன் விற்பனை பலவீனமாக இருந்தது. மேலும், விலை நிர்ணயம் செய்யும் திறன் குறைவாகவும், தயாரிப்புகளை பிரீமியம் நிலைக்கு உயர்த்துவதில் மெதுவாகவும் உள்ளது.
இந்த ஆண்டு, நிறுவனங்களின் செயல்திறன் கூர்மையாகப் பிரிந்துள்ளது. பிரீமியம் சிகரெட்டுகள், கேப்சூல் வடிவங்கள், மெல்லும் பொருட்கள், ஏற்றுமதியின் காரணமாக காட்ஃப்ரே நிறுவனத்தின் விற்பனை முதல் காலாண்டில் 25% அதிகரித்ததால், அதன் பங்கு மதிப்பு இருமடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஜி,எஸ்.டி. 2.0 அமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தும் வரை, புகையிலை நிறுவனங்களின் பங்குகள் நிலையற்ற தன்மையுடன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். வரிச்சுமை மிதமாக அதிகரித்தால், ஐ.டி.சி., காட்ஃப்ரே அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.
