H1B VISA : வணிக கூட்டமைப்புகள் எச்சரிக்கை.,
H-1B விசா விண்ணப்பங்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட $100,000 கட்டணம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல்வேறு அமெரிக்க வணிகக் கூட்டமைப்புகள், அமெரிக்க அதிபர் டிரம்பை எச்சரித்ததுள்ளன. நிறுவனங்களின் மீது கூடுதல் சுமைகளை சுமத்தும் இத்தகைய முன்னெடுப்புகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தின.
இது தொடர்பாக வெள்ளி அன்று சிப் தயாரிப்பாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் டிரம்பிற்கு கடிதம் அனுப்பினர்.
புதிய விசா கட்டணம், வெளிநாடுகளைச் சேர்ந்த, திறன் மிகு தொழிலாளர்களின் வருகையை முடக்கி, முக்கியமான பணியிடஙக்ளை நிரப்ப முடியாமல் செய்து விடும் என்று கூறியுள்ளன.
டிரம்பின் H-1B கட்டண உயர்வு அறிவிப்பிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த கடிதம், அமெரிக்காவிற்கு முதலீட்டைக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது.
இதில் கையொப்பமிட்டவர்களில் வணிக மென்பொருள் கூட்டமைப்பு, செமிகண்டக்டர் துறையின் SEMI அமைப்பு, தேசிய சில்லறை விற்பனை நிறுவனங்களின் கூட்டமைப்பு, பொழுதுபோக்கு மென்பொருள் சங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில் கவுன்சில் ஆகியவை அடங்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறை முதல் சுகாதாரப் பராமரிப்பு, நிதித் துறை வரை பல்வேறு தொழில்களை H-1B கட்டண உயர்வு பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மைக்ரோசாப்ட், அமேசான், வால்மார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், திறன் மிகு ஊழியர்களை பணியமர்த்த பல ஆண்டுகளாக இதை பயன்படுத்தி வருகின்றன. இது முடக்கப்பட்டால், பிறகு தேவையான அளவுக்கு திறன் மிகு ஊழியர்களை பணியமர்த்த முடியாமல், பெரிய அளவில் அவை பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் போன்ற அதிநவீன துறைகளின் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க, உயர் திறன் கொண்ட பணியாளர்கள் அதிக அளவில் தேவை என்று அந்த கூட்டமைப்புகள் எழுதியுள்ளன. இன்டெல் கார்ப், தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் KLA கார்ப் ஆகிய நிறுவனங்கள் SEMI அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில் வெள்ளியன்று ஒரு செவிலியர்-பணியாளர் நிறுவனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் H1B கட்டண உயர்வை தடுக்கக் கோரி டிரம்ப் அரசு மீது மத்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
