விப்ரோ ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்…
இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக விப்ரோ நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி சம்பள உயர்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் செப்டம்பரிலேயே சம்பள உயர்வு அளித்திருக்க வேண்டும்.ஆனால் அதற்கான அவகாசம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. உலகளவில் நிலைமை சரியில்லாமல் இருந்த நேரத்தில் சம்பள உயர்வு தரமுடியாமல் இருந்த நிலையில் தற்போது சம்பள உயர்வு செயல்படுத்தப்பட்டு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்பட்ட புதிய சம்பளம் பணியாளர்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. அதிக வருவாய் தரக்கூடிய நிறுவனங்களுடன் விப்ரோ நிறுவனம் கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது.ஏற்கனவே எடுத்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய வேலை அளிக்க இயலாமல் பாதி சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்களா என்றெல்லாம் பேசி சர்ச்சையிலும் விப்ரோ நிறுவனம் சிக்கியது. ஏற்கனவே இந்தாண்டு ஏப்ரலில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது.மிகச்சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு 12 முதல் 15 விழுக்காடு வரை சம்பள உயர்வு அளித்து மிரள வைத்தது டிசிஎஸ் நிறுவனம். அடுத்த மாதம் புதிய சம்பளத்தை இன்போசிஸ் நிறுவனமும் தனது பணியாளர்களுக்கு அளிக்க இருக்கிறது. எச்சிஎல் நிறுவனத்தில் உள்ள மூத்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏதும் இல்லை என்றும் இளநிலையில் உள்ள பணியாளர்களுக்கு 3 மாதத்துக்கு பிறகு சம்பள உயர்வு இருக்கும் என்றும் எச்.சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஓரிரு வாரங்களில் வெளியிட இருக்கின்றன.