லட்சம் கோடி ரூபாயை இதற்காக மாற்றியதா ரிசர்வ் வங்கி?
ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி என்னவெல்லாம் நடவடிக்கை செய்துள்ளது என்பதுகுறித்து ஆண்டறிக்கை வழங்குவது வழக்கம். இந்தாண்டுக்கான அறிக்கை மே 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி இந்தியாவின் அவசர தேவைக்கும், எதிர்பாராமல் வரும் செலவுகளையும் சமாளிக்கும் நோக்கில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமாக திடீர் செலவுகளை எதிர்பார்க்கும் அளவானது 6 விழுக்காடாக உள்ளது. இது கடந்தாண்டு 5.5% ஆக இருந்தது. 5.5 முதல் 6.5%க்குள் இந்த அளவு இருந்தால் நிலைமையை சமாளிக்க இயலும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி கணக்கு போட்டு வைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் Contingency நிதியானது 13விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இருந்த அளவை விட அதிகரித்து தற்போது 3லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தங்கம், கடன் முன்தொகை ஆகியவற்றை சமாளிப்பதற்காக எடுத்து வைக்கும் தொகையானது இரண்டரை விழுக்காடு உயர்ந்து 63லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ரிசர்வ்வங்கிக்கு வரவு மட்டும் 43 விழுக்காடு அதிகரித்துள்ளது.வட்டிகள் மூலம் வரும் தொகை ரிசர்வ் வங்கிக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது.வெளிநாட்டு பணத்தை இந்தியாவில் மாற்றியதன் மூலமாக மட்டும் 1லட்சத்து 03 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. ரூபாய்க்கான பாதுகாப்புக்காக ரிசர்வ் வங்கிக்கு 223 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.