ஏழு மாத தடைக்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கி மீண்டும் கிரெடிட் கார்டுகளை வழங்க உள்ளது!
விதிமுறை மீறல் காரணமாக, கடந்த டிசம்பரில் ஹெச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. இனி ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி கிரெடிட் கார்டுகளை வழங்கலாம் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், ஹெச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கக்கூடாது என்றும், டிஜிட்டல் 2.0 திட்டத்தின் கீழ் அதன் டிஜிட்டல் வணிக செயல்பாடுகளின் அனைத்து புதிய தொடக்கங்களையும் நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. வங்கியின் மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கி செயல்பாடுகளில் (internet banking) செயலிழப்புகள் ஏற்பட்ட பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தடைக்குப் பிறகும், ஹெச்டிஎஃப்சி வங்கி நாட்டின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக தொடர்கிறது. தடை நீக்கப்பட்டவுடன் வங்கி மீண்டும் புதிய கிரெடிட் கார்டு வணிகத்திற்கு வருவதற்கான தீவிரமான திட்டத்தை கொண்டுள்ளது என்றும், ஆர்பிஐ சுட்டிக்காட்டிய சிக்கல்களை சரிசெய்து முன்போலத் திகழ வங்கி தயாராக உள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.