முன்னாள் பத்திரிகையாளருக்கு காப்பீட்டு சேவை மறுப்பு..,
முன்னாள் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு எச்டிஎப்சி எர்கோ மருத்துவக் காப்பீடு அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரீத்தி சோபே என்பவர் முன்னாள் பத்திரிகையாளராவார். அவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது பேசு பொருளாகியுள்ளது. திடீரென மயக்கமடைந்த அவரிடம் எச்டிஎப்சி எர்கோ மருத்துவ காப்பீடு இருந்தது. எனினும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டென்ஷன் அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டதாக கூறி, எச்டிஎப்சி எர்கோ நிறுவனம் அவருக்கான மருத்துவக்காப்பீட்டை மறுத்தது. தாம் நம்பி கட்டிய இன்சூரன்ஸ் தொகை தனக்கு உதவி செய்யவில்லை என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிரச்சனை பெரிதான உடனேயே , மருத்துவ காப்பீட்டு நிறுவனம் டிவிட்டரிலேயே வருத்தம் தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட பத்திரிகையாளரின் விவரங்களை அளிக்கும்படி பொதுவெளியில் பதிவும் செய்திருக்கிறது. இதுபற்றி எச்டிஎப்சி நிறுவனம் எந்த வித பதிலையும் அளிக்கவில்லை. இந்தியாவின் முக்கியமான 5 காப்பீட்டு நிறுவனங்களில் எச்டிஎப்சி எர்கோ காப்பீட்டு நிறுவனமும் இருக்கிறது. கடந்த 2022-ல் எச்டிஎப்சி நிறுவனம் அதிக செட்டில்மென்ட்களை அளித்ததும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளருக்கு காப்பீட்டு சேவை மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.