கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை…
கடந்த 15 நாட்களில் மட்டும் வெங்காயத்தின் விலை 60%வரை உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18% உயர்ந்திருக்கிறது. உற்பத்தி குறைவு காரணமாக வரும் டிசம்பர் வரை வெங்காய விலை கடுமையாக உயர்ந்தபடியே இருக்கும் என்று வணிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அகமது நகரில் 35 ரூபாயாக இருந்து வெங்காயம் 10 நாட்களில் 45 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 45 முதல் 48 ரூபாயாக இருக்கிறது. வெங்காய விலை உயர வாய்ப்பிருப்பதால் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு 40%வரி விதிக்கப்பட்டது. சந்தைக்கு வரவேண்டிய வெங்காயத்தின் அளவு குறைந்ததே விலையேற்றத்தின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வழக்கமாக காரிப் பருவத்தில் வரும் வெங்காயத்தின் வரவு 2 மாதங்கள் தாமதமாகும் என்பதால் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. குறைவான மழை காரணமாக கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் வெங்காயத்தின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக வெங்காயத்திற்கு பதிலாக ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் இருந்து தற்போது வெங்காயம் நாடு முழுவதும் விற்கப்பட உள்ளது. வழக்கமாக ராஜஸ்தானில் கிடைக்கும் வெங்காயத்தைவிட 40% குறைவான அளவே இந்தாண்டு உற்பத்தி ஆகியுள்ளதாக ராஜஸ்தானிய வணிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.