இது இந்திய மக்களை எவ்வளவு பாதிக்கும்?
அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்த சூழலில், உக்ரைன் உடனான ரஷ்யா நடத்தி வரும் போரை இந்தியா சாதகமாக பயன்படுத்தி வருகிறது. மலிவு விலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி பயனடைந்து வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையில் ரஷ்யா-இந்தியா இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கவில்லை. எனினும், ஜி7நாடுகளின் அதிகாரிகள் அமர்ந்து பேசி ரஷ்ய கச்சா எண்ணெயை எவ்வளவு அதிகபட்சத்துக்கு விற்க வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்துள்ளன. அதன்படி ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரல் அதிகபட்சமாக 60 டாலருக்கு மேல் விற்கக்கூடாது என இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். ஜி7 அமைப்பு,ஆஸ்திரேலியா, மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்களின்படி வரும் 5ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் எவ்வளவு ரூபாய்க்கு விற்க வேண்டும் என ஜி7 நாடுகள் எப்படி முடிவெடுக்க முடியும் என்று ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புதிய விலை அமலுக்கு வந்தால் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் தற்போது மலிவு விலைக்கு வாங்கும் கச்சா எண்ணெய் தடை பட அதிக வாய்ப்புள்ளது. உலகளவில் மீண்டும் கச்சா எண்ணெய் விற்பனை தீவிரம் அடையும் என்றபோதும்,இந்தியாவுக்கு இந்த புதிய அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.