உங்களுக்கு தகுந்த ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி??
- உங்கள் வயது என்ன? உங்களை சார்ந்தவர்கள் யார் யார் ?
ஆயுள் காப்பீட்டு பாலிசியை தேர்வு செய்யும் போது முதலில் உங்கள் வயது என்ன என்பதை பொருத்தும், உங்களை சார்ந்தவர்கள் யார் யார் என்பதை பொருத்தும் முடிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கக்கூடிய நபர் என்றால், நீங்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் குடும்பம் நல்லதொரு வாழ்க்கை வாழ , எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். அதற்கு தகுந்தார் போல் ஆயுள் காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யவும். ஒருவர் திருமணம் ஆகாதவர் என்றால் அவரை சார்ந்தவர்கள் அதிகம் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, அப்படிப்பட்ட நேரத்தில் அதற்கு தகுந்தார் போல் ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்யலாம்.
- வாழ்க்கைத் தரம்…
ஒரு ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்யும் பொழுது உங்கள் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியம். ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை ஆராய வேண்டும். நீங்கள் இல்லாத பட்சத்தில், உங்கள் குடும்பம், இதே வாழ்க்கை தரத்தை கடைபிடிக்க வேண்டுமானால், அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிடவும். அவ்வாறு கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற் போல் ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும்.
- உங்கள் வருமானம் எவ்வளவு?
ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்யும் முன்னர், உங்களது ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ளவும். காரணம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கடமைகள் இருக்கும். அதற்கு தகுந்தாற் போல் பணத்தேவையும் இருக்கும். அதை பொறுத்து காப்பீட்டுத் தொகை எவ்வளவு தேவை என்பதை நிர்ணயம் செய்ய, ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
- உங்கள் கடன் எவ்வளவு?
நீங்கள் திருப்ப செலுத்த வேண்டியிருக்கும் கடன்கள் எவ்வளவு என்பதை கணக்கிடுங்கள். ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்யும் பொழுது, உங்கள் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிடுவதும் மிக முக்கியம். காரணம், காப்பீடு எடுத்து இருக்கக்கூடிய நபரின் மறைவிற்குப் பிறகு கிடைக்கக்கூடிய காப்பீட்டு பணம், பெற்ற கடனை அடைப்பதற்கு சரியாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், அது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிரமமாக அமையும்.
- ரைடர்ஸ் குறித்து தெரியுமா?
ஆயுள் காப்பீட்டிற்கு ஒரு பிரீமியம் தொகை செலுத்தப்படுவதைப் போல, ரைடரை பாலிசி தேர்வு செய்தால், ஒரு குறிப்பிட்ட தொகை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். கூடுதலாக தொகை செலுத்துவதைப் போல கூடுதலான சிறப்புகளும் இந்த ரைடர் பாலிசியின் மூலம் கிடைக்கும். இந்த ரைடர் பாலிசி என்பது அடிப்படையாக நீங்கள் பெறக்கூடிய ஆயுள் காப்பீட்டுடன் கூடுதலாக கிடைக்கக்கூடியது. இதில் பலவகை ரைடர் பாலிசிகள் இருக்கின்றன. அதை ஒருவர் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து அதற்கான கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம், அந்த பயனை பெற முடியும்.
- காப்பீட்டுத் தொகை சரியாக கிடைக்குமா?
ஒரு நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு எடுக்கும் பொழுது, அந்த நிறுவனம் காப்பீடு எடுத்தவரின் மறைவிற்குப் பிறகு, அந்த காப்பீட்டுத் தொகையை, சரியாக செட்டில் செய்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அதாவது ஒரு ஆண்டில் 100 பேர் காப்பீட்டுக்கான தொகையை கேட்டு வருகிறார்கள் என்றால், அதில் எவ்வளவு நபர்களுக்கு அந்த குறிப்பிட்ட நிறுவனம் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம். இது அந்த காப்பீட்டு நிறுவனத்தின் உடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் விஷயமாக அமையும்.