HUL – ஐஸ் கிரீம்:தனித்துப் பட்டியலிட அனுமதி
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) தனது ஐஸ் கிரீம் வணிகத்தை தனித்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றுவதற்கான முக்கியமான படியாக பங்குதாரர்களின் அனுமதியை பெற்றுள்ளது.
க்வாலிட்டி வால்ஸ், கார்னெட்டோ, மேக்னம் போன்ற பிரபலமான பிராண்டுகளை கொண்டுள்ள இந்த வணிகத்தை பிரித்து புதிய நிறுவனம் உருவாக்கும் திட்டம், நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி நோக்கில் ஒரு முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, “ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், க்வாலிட்டி வால்ஸ் (இந்தியா) லிமிடெட்” மற்றும் அவர்களது பங்குதாரர்களுக்கிடையேயான ஒப்பந்தத் திட்டத்திற்கு பெரும்பான்மையான பங்குதாரர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
2025 ஜூலை 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இந்திய நிறுவனச் சட்டம் 2013 இன் பிரிவு 230(6) கீழ், தொலைதூர மின்னணு வாக்களிப்பு கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு ஆகிய முறைகளின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய நிறுவனம் சட்ட தீர்ப்பாயம் (NCLT) வழங்கிய வழிமுறைகளின் படி நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், மொத்த வாக்குகளின் 99.99 சதவீதம் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்தது. இந்த செயல்முறை முழுவதும் ஆன்லைனில், remote e-voting மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம், நிறுவனத்தின் நிதித் தலைவர், பிரிவாக்க செயல்முறை இந்நிதியாண்டிற்குள் நிறைவடையும் என்றும் அதன் பின்னர் புதிய நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் படி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குதாரர்கள், தங்களிடம் உள்ள பங்கு விகிதத்துக்கு (1:1) இணையான அளவில் புதிய நிறுவனத்தின் பங்குகளையும் பெறுவார்கள்.
இந்த மாற்றம், உலகளாவிய தாய் நிறுவனம் யூனிலீவர் தனது ஐஸ் கிரீம் வணிகத்திலிருந்து உலகளவில் பிரியும் முடிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம், ஐஸ் கிரீம் வணிகம் தனித்துவமான வளர்ச்சி பாதையைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். நிறுவனத்தின் கருத்துப்படி, தனித்துப் பட்டியலிடப்பட்டதன் மூலம் வணிகத் திட்டங்களில் வேகமான முடிவெடுப்பும் சந்தை போட்டியில் அதிக முன்னேற்றமும் பெற முடியும்.
