சுக்குநூறாய் உடைந்த பங்குச்சந்தைகள்!!!
இந்திய சந்தைகள் கடந்த சில வாரங்களாக ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தன. இதே பாணி மீண்டும் தொடர்கிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 694 புள்ளிகள் சரிந்து 61 ஆயிரத்து 54 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 186 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. டைட்டன் கம்பெனி பங்குகள் மட்டும் 2.34 விழுக்காடு அதிகரித்தது. எச்டிஎப்சி வங்கித்துறை பங்குகள் கிட்டத்தட்ட 6 விழுக்காடு சரிந்தன. இண்டஸ்இன்ட் வங்கியிலும் குறிப்பிடத்தகுந்த அளவு சரிவு காணப்பட்டது. அமெரிக்காவில் அடுத்தடுத்து 3 வங்கிகள் சரிவை சந்தித்த அதே சூழலில் ,4வதாக ஒரு வங்கியும் சிக்கலை சந்தித்து வருவதால் அதன் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவிலும் வங்கித்துறை பங்குகள் வீழ்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பங்குச்சந்தைகள் வீழ்ந்த அதே மே 5ம் தேதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் தங்கம் விலை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 775 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 200ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையும் 90 காசுகள் அதிகரித்து 83 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை 900 ரூபாய் அதிகரித்து 83 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே கூறிய தங்கம் விலையுடன் 3 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியும் கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் அதையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.