425 கோடி ரூபாய் வேணும்.. !!!
கோஃபர்ஸ்ட் என்ற விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் விமான சேவையை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் இயங்க வேண்டுமெனில் 425 கோடி ரூபாய் நிதி உடனடியாக தேவை என்று அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்பு அதிகாரி சைலேந்திர அஜ்மீரா தெரிவித்துள்ளார். விமான இன்ஜின்களை அமெரிக்க நிறுவனம் சரி செய்து தராததால் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளதால் கோஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்தது. தற்போது எத்தனை விமானங்கள் இயக்க உகந்தவை என்று கணக்கெடுப்பை நடத்திவிட்டு மீண்டும் பணிகளை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ, டாய்ட்ச் வங்கி ஆகியவை அடங்கிய குழு நிதி அளிக்க முன்வந்துள்ள நிலையில் எவ்வளவு தேவை என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகை இடைக்காலத்துக்கு மட்டுமே செலவாகும் என்றும், நீண்ட நாட்களுக்கு இன்னும் அதிக தொகை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்களை திருப்பி செலுத்த ஏற்கனவே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்கனவே கால அவகாசம் அளித்துள்ளது. இந்த சூழலில் மீண்டும் விமானங்களை இயக்குவதற்கான பணிகளை கோஃபர்ஸ்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. கோஃபர்ஸ்ட் நிறுவனம் திடீரென சேவைகளை நிறுத்தியதால் இந்திய விமான போக்குவரத்துத்துறையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. திடீரென சில நிறுவனங்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தியிருந்தன. இது பற்றி மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்த நிலையில், 425 கோடி ரூபாய் இருந்தால் உடனடியாக விமானங்களை பறக்க வைக்க இயலும் என்று கோஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.