பெட்ரோல் விலையை குறைங்கனு சொன்னா, யாருக்கு விலையை குறைச்சுருக்கீங்க!!??
சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வரும் சூழலில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும்
எரிபொருளின் விலையும் குறைந்து வருகிறது. ஒரு கிலோ லிட்டர் எரிபொருளின் விலை 2 ஆயிரத்து 775 ரூபாய் குறைந்து,1 லட்சத்து 17 ஆயிரத்து 587 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் சரிவால் தொடர்ந்து சரிந்து வரும் விலை காரணமாக இந்தியாவில் விமான எரிபொருளின் விலை 2.3% வீழ்ந்துள்ளது. சர்வதேச அளவில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு இந்த விலை குறைப்பு சற்று ஆறுதல் தருகிறது. ஏனெனில் விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40% எரிபொருள் சார்ந்தே இருப்பதால் இந்த விலைக்குறைப்பு நிச்சயம் நல்ல பலன்தரும் என்று நம்பப்படுகிறது. கடந்த மாதமும் விமான எரிபொருளின் விலை 4 ஆயிரத்து 842 ரூபாய் ஒரு கிலோ லிட்டருக்கு குறைக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்கள் பயன்படுத்தி வரும் எரிபொருளின் விலை கடந்த 8 மாதங்களாக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருப்பதால் மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர். மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில்
இந்தமாதம் பெரிய அளவு ஏற்ற இறக்கம் இல்லாமல் பழைய விலையே தொடர்கிறது.