சட்டவிரோத வணிகம்-சாட்டையை சுழற்றும் அரசு..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுங்கத்துறை அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். கடத்தல்காரர்கள்,சர்வதேச கடத்தல் கும்பல்களை தடுக்கும் நோக்கிலும், முக்கிய நிழல் உலக தாதாக்களை கண்டுபிடிக்கவும் இந்த புதிய யோசனைகளை அம்மையார் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நடந்த அந்த சர்வதேச கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர்,கடத்தல்களை தடுக்க கூட்டு முயற்சி எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சர்வதேச அளவிலான கடத்தல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் உலகளாவிய சுங்க அமைப்பான WCOஉதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில் கடத்தல் தொடர்பான குற்றங்களில் எந்த வகையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற முன்வடிவுகளை வைக்க வேண்டும் என்றும்,ஏனெனில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவகையாக செயல்பட முடியாது என்று குறிப்பிட்டார். கடத்தல்களை தடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பணி என்று குறிப்பிட்ட அம்மையார், கடத்தல்களால் உலகளவில் வன உயிரினங்கள் மற்றும் பயிர்கள்,செடி கொடிகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முக்கிய கடத்தல்காரர்களை பிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அம்மையார் குறிப்பிட்டுள்ளார். மறைமுக வரிகள் மற்றும் சுங்கம் சார்ந்த இயக்குநரகமான் CBICயின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால்,சட்டவிரோத பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக கடந்தாண்டு மட்டும்,25 டிரில்லியன் டாலர் அளவுள்ள பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குறிப்பிட்டார். அரிதான பொருட்கள்,சிகரெட்,தங்கம்,வன விலங்குகள்தான் அதிகம் கடத்தப்படுவதாக சஞ்சய் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் கடத்தல் நடப்பதன் மதிப்பு மட்டும் 650 பில்லியன் டாலர்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆப்ரேஷன் சேஷா 4 மூலம் இதுவரை ஆந்திர செம்மரக்கடத்தல் கும்பலை தடுக்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும், 2015,17,19ஆகிய ஆண்டுகளில் இந்த பணிகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.