$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர் கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியன் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் 5.6 பில்லியன் டாலர்கள் சரிந்து 194.2 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய கடனாளியாக மாறி இருக்கும் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, சீன அரசின் ரியல் எஸ்டேட் சந்தை மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் காரணமாக இந்த நெருக்கடி உருவாக்கி இருக்கும் சூழலில் உலகளாவிய அளவில் இதன் தாக்கங்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. சீன அரசு கடன் உச்ச வரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொருளாதாரப் பேரழிவு ஏற்படலாம் என்று அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜெனெட் எல்லனின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக சந்தைகள் நேற்று இந்த வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
அமெரிக்க பங்குச் சந்தையின் மிகப்பெரிய பங்குகளின் செயல்பாட்டைக் குறிக்கும் S&P 500 கடந்த மே மாதத்தில் இருந்து 1.7 % சரிவை அடைந்திருக்கிறது. எவர்கிராண்ட் நிறுவனரும், அதன் தலைவருமான “ஹுய் கா யான்” ப்ளூம்பெர்க் தரவரிசையில் மிகப்பெரிய வீழ்ச்சியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார், நிறுவனத்தின் பங்குகள் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்திருக்கிறது. இப்போதைய அவருடைய சொத்து மதிப்பு 7.3 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இது 2017 ஆம் ஆண்டில் 42 பில்லியன் என்ற உச்ச அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எவர் கிராண்ட் நிறுவனத்தின் இந்த நிதி நெருக்கடியானது, ஹாங்காங் பங்குச் சந்தைக் குறியீட்டிலும் தாக்கம் விளைவித்திருக்கிறது, உலகப்பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் லீ ஷௌ-கீ, யாங் ஹுயான், லி கா-ஷிங் மற்றும் ஹென்றி செங் ஆகியோர் கூட்டாக 6 பில்லியன் டாலர் நஷ்டமடைந்திருக்கிறார்கள். சீனாவின் புகழ்பெற்ற இ-காமர்ஸ் தளமான “பின்டுயோடுயோ இன்க்”கின் நிறுவனர் கொலின் ஹுவாங் இந்த ஆண்டில் மட்டும் 29.4 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார், கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் 2.3 பில்லியன் டாலர்களை அவர் இழந்து, சீனாவின் அதிகபட்ச இழப்பை சந்தித்திருக்கிறார்.