ரமணா பட பாணியில் இங்க தட்டினா அங்க வலிக்குதே..!!!
அதிக பணவீக்கத்தால் அமெரிக்கா கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.இதனால் வட்டிவிகத்ததை அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகளவில் உயர்த்தி வருகிறுது. இந்த சூழலில், விலைவாசி ஓரளவு சமாளிக்கக்கூடிய அளவில் வந்ததால் பெடரல் ரிசர்வும் வட்டியை உயர்த்துவதை நிறுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சிலிக்கான் வேலி வங்கி திடீரென திவாலானது. இதனால் அமெரிக்க அரசு கடும் நிதி திட்டங்களை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் மீண்டும் கடன்களின் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக பிரபல கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன அதிகாரிகள் கணித்துள்ளனர்.வரும் 22 ம் தேதி இது தொடர்பான அறிவுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன அதிகாரிகள் இதனால் தங்கள் உத்தியை மாற்றி வருகின்றனர்.அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்துவார்கள் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. தற்போது இது மேலும் உயர வாய்ப்பிருப்பதாக மாற்றி கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கடன் வாங்குவோர் கூடுதல் தொகையை வட்டியாக செலுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணிகளால் பல பெரிய நிறுவனங்கள் மீண்டும் ஆட்குறைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திவாலாகிவிட்ட சிலிக்கான் வேலி வங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்க அரசு அதிகாரிகள் கொண்டு வந்தாலும், சில நடவடிக்கைகளை முதலீட்டாளர் நலன் கருதி எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திவாலான சிலிக்கான் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகையும்,அவசரகால பண எடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்தாண்டில் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மே,ஜூன்,ஜூலை மாதங்களில் பெடரல் ரிசர்வின் வட்டி விகிதத்தை சரியாக கணித்திருப்பதால் இந்த முறையும் சரியாகவே இருக்கும் என்பது பல நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிறுவனம் கணிப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் வரும் 22ம் தேதி பெடரல் ரிசர்வ் உயர்த்தி வட்டி விகிதம் 5.25 முதல் 5.50%ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.