முற்றும் மஸ்க்-ஆப்பிள் யுத்தம்..
அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும், ஆப்பிள் இயங்குதளத்தையும் இணைக்க இசைவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எக்ஸ் நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க், கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடியும் ஐஓஎஸ் 18-ம் சேர்ந்தால் அது ஏற்றுக்கொள்ள இயலாத பாதுகாப்பு விதிமீறல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டும் சேர்ந்தால் அந்த ஐபோன்கள் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை தனது நிறுவனங்களான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்கில் தடை விதிப்பேன் என்றும் மஸ்க் பகிரங்கமாக விளக்கம் அளித்துள்ளார். சாட்ஜிபிடியும் ஆப்பிள் நிறுவனமும் சேர்ந்தால் , பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் விதிகளை மீறி பெறப்படலாம் என்று கூறப்படுகிறது. தங்கள் நிறுவனத்திற்குள் வரும் பார்வையாளர்கள் இனிமேல் ஐபோன்களுடன் வந்தால் அவற்றை சிக்னல் இல்லாத இடங்களில்வைத்துவிட்டு வரும்படி கட்டளையிடுவேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த எந்த கட்டுப்பாடுகளும் ஆப்பிள் வசம் இல்லாமல் போய்விடும் என்றும் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.