ரூபாயில் எண்ணெய் வாங்கும் இந்தியா..!!!
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா பல ஆண்டுகளாக வாங்கி வருகிறது. இருந்தபோதிலும், இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கும் திட்டம் அமலாகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா 85 விழுக்காடு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக எங்கு கச்சா எண்ணெய் விலை குறைவு என தேடுதல் வேட்டையை இந்தியா நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் போருக்கு பிறகு இந்திய ரூபாயில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. அதேபோல் கடந்த ஜூலையில், இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்திய ரூபாயை சர்வதேச அளவில் பிரகடனப்படுத்துவதன் மூலம் அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் அவசியம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்திய ரூபாயில் 2022-23 நிதியாண்டில் பெரிய தொகை அளிக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டது. கச்சா எண்ணெயை மட்டுமல்லாது படிப்படியாக பிற பயன்பாடுகளுக்கும் இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்பதும் வணிகர்களின் கருத்தாக இருக்கிறது.