அசுர வளர்ச்சியில் இந்தியா…
நிதிநிலை, பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலை தயாரிக்கும் நிறுவனமாக Fitch என்ற நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிலையில் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி 6.5விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த உள்நாட்டு உற்பத்தி 6.9விழுக்காடாக இருக்கிறது. சிமென்ட், மின்சாரம், பெட்ரோலிய பொருட்களுக்கு 2023 ஆம் ஆண்டில் மிக அதிகளவில் தேவை இருந்ததாகவும், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அளவுக்கு தேவைகள் இந்தியாவில் இருந்தததாக ஃபிட்ச் தனது டிசம்பர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கார் விற்பனைக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும்,ஸ்டீல் உற்பத்தியும் உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இப்போது உலகளவில் இந்தியா 5 ஆவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டியிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விரைவில் ஜப்பானை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-29 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது 2022-23 காலகட்டத்தில் இருந்ததை விட 290 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் பெரிய பங்கு வகிப்பதாக ஃபிட்ச் தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மந்தமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப ஆட்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடும் இந்தியாவின் வளர்ச்சி 2023-34-ல் 6.3 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இதேபோல் 2024-ல் இந்தியாவின் ஜிடிபி தான் 13 நாடுகளில் மிக அதிகம் என்று கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கியும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து உள்நாட்டு உற்பத்தி 7 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி 7.6விழுக்காடாக இருந்ததாக அரசு தரவுகள் கூறியுள்ள நிலையில் தற்போது ஃபிட்ச் அறிக்கையும் கவனம் பெற்றுள்ளது.