இந்திய – சிங்கப்பூர் நிதிப் பரிமாற்றங்களில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் !
இந்திய ரிசர்வ் வங்கியும், சிங்கப்பூர் நிதி ஆணையமும் தங்கள் பணப்பரிமாற்ற முறைகளை இணைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன, யூ.பி.ஐ எனப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இணைய செயலியும், சிங்கப்பூரின் பே-நவ் (Pay Now) ஆகிய இரண்டும் இணைந்து, தங்கள் பயனர்களுக்கான நாடுகளுக்கு இடையிலான பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான பணப்பரிமாற்றங்களை பரஸ்பர அடிப்படையில் அனுமதிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜூலை 2022 க்குள் செயல்பாட்டுக்கு வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யூ.பி.ஐ – பே-நவ் இடையிலான இந்த இணைப்பு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், மேலும் விரைவான, மலிவான, வெளிப்படையான நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஜி-20 யின் கொள்கைகளுக்கு நெருக்கமாக இது இருக்கிறது.” என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. கடந்த ஆண்டில், பன்னாட்டுப் பரிவர்த்தனைகளுக்கான இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NBCI), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான் மற்றும் ஜப்பான் உடனான யூ.பி.ஐ மற்றும் ரூபே இணைப்புகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. “இந்திய, சிங்கப்பூர் விரைவுப் பரிவர்த்தனை இணைப்பு நடவடிக்கை கியூ.ஆர் குறியீடு (QR Code) மற்றும் கார்டுகளின் வழியான பரிவர்த்தனையில் எல்லை தாண்டிய செயல்பாட்டை உருவாக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பயணம் மற்றும் பணம் அனுப்பும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உற்சாகம் கொடுக்கும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முயற்சியானது 2019-21 ஆண்டில் பேமெண்ட் சிஸ்டம்ஸ் விஷன் ஆணையத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட நாடுகளுக்கிடையிலான எல்லை தாண்டிய பணம் அனுப்பும் முறைகளை மறுஆய்வு செய்யும் ரிசர்வ் வங்கியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த இணைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பே-நவ் என்பது சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NFI) மூலமாக நிதிப் பரிமாற்ற சேவையை வழங்கும் விரைவுக் கட்டண அமைப்பாகும். இது பயனர்கள் தங்கள் மொபைல் எண், சிங்கப்பூர் என்ஆர்ஐசி / எஃப்ஐஎன் அல்லது விபிஏக்களைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள மற்றொரு வங்கி அல்லது இ-வாலட் கணக்கிலிருந்து உடனடி நிதியை அனுப்பவும், பெறவும் உதவுகிறது.
யூபிஐ என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான, ‘வேகமான கட்டணம்’ செலுத்தும் அமைப்பு, இது வாடிக்கையாளர்கள் உருவாக்கும் விர்ச்சுவல் கட்டண முகவரியைப் (விபிஏ) பயன்படுத்தி உடனடியாக 24 மணி நேரமும் பணம் செலுத்த உதவுகிறது. யுபிஐ பயன்படுத்தும் தனி நபர் மற்றொரு நபருக்கு (பி2பி), ஒரு வணிகர் ஒரு தனி மனிதருக்கு (பி2எம்) என்ற இரண்டு வகையான பரிவர்த்தனைகளையும் ஏற்றுக் கொள்கிறது, மேலும் இது ஒரு பயனர் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அல்லது பெற உதவுகிறது. 2016 ஆம் ஆண்டில் என்பிசிஐ ஆல் உருவாக்கப்பட்ட இந்த கட்டண முறைத் திட்டம், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், யூபிஐ ரூ.6,39,116 கோடி மதிப்புள்ள 355 கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இது ஒரு சாதனை அளவாகும்.