கடைசி நாளில் கலங்க வைத்த இந்திய சந்தைகள்!!!
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான பிப்ரவரி 17ம் தேதியான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 317 புள்ளிகள் சரிந்து,61 ஆயிரத்து 2 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது. 91 புள்ளிகள் சரிந்த அந்த பங்குச்சந்தை 17 ஆயிரத்து 944 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. உலகளாவிய காரணிகளால் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடனே காணப்பட்டது. இரண்டாவது பாதியில் பெரிய அளவில் பங்குகளை விற்று வந்த முதலீட்டாளர்கள், கடைசி ஒருமணி நேரத்தில் மட்டும் பங்குகளை வாங்கியதால் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது. அதானி என்டர்பிரைசர்ஸ்,இண்டஸ் இன்ட் வங்கி, நெஸ்ட்லே இந்தியா,பாரத ஸ்டேட் வங்கி காப்பீடு ஆகியவை பெரிய இழப்பை சந்தித்தன.எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமெண்ட், BPcl, ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளன. தங்கம் வெள்ளி விலையும் மக்களுக்கு சாதகமான விலையிலேயே விற்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆட்டம் போட்ட தங்கம் தற்போது மீண்டும் 42 ஆயிரம் ரூபாய்க்கு வந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 240 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 250 ரூபாயாக உள்ளது.இது முன்தின விலையை விட கிராமுக்கு 30 ரூபாய் குறைவாகும். வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் சரிந்து 71 ரூபாய் 20காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.