ரிலையன்ஸை எதிர்க்கும் இந்திய வணிகர்கள் ! என்ன காரணம்?
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீட்டு உபயோக பொருட்களை நேரடியாக தயாரிப்பாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி தனது நேரடி விற்பனை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் லாபமீட்டி வருகின்றன. ஆனால் நடுவில் இருக்கும் சிறு வணிகர்களின் விற்பனை 20லிருந்து 25 சதவீதம் பாதிக்கப் படுகிறது. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் சுமார் 45 ஆயிரம் விநியோகஸ்தர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர். இவர்கள்தான் இதுநாள்வரை தயாரிப்பாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்தவர்கள்.
இந்நிலையில் அனைத்திந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கட்டமைப்பு ரிக்கெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோல்கேட் உள்ளிட்ட 20 நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸூக்கு கொடுக்கும் அதே விலைக்கு தங்களுக்கும் பொருட்களை தரவேண்டும் எனவும், தவறினால் சில்லறை விற்பனை கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதையும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருட்களை அனுப்புவதையும் நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இவர்களது கோரிக்கைக்கு இதுவரை எந்த நிறுவனத்திடமும் இருந்து பதில் வரவில்லை.
நாடு தழுவிய அளவில் சுமார் 80 சதவீதம் சிறு வணிகர்கள்தான். கிட்டத்தட்ட 900 பில்லியன் டாலர் வர்த்தகம் இவர்களுடையதுதான். இவர்களது அமைப்பில் இதுவரை 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 150 நகரங்களில் சற்றேறக்குறைய 3 இலட்சம் வணிக நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது ரிலையன்ஸ். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் ஒரு கோடி வணிக நிறுவனங்களை இணைத்து கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.