நவீனமயமாகிறது இந்திய அஞ்சல்துறை வங்கிகள்!!!
இந்தியாவில் உள்ள அஞ்சல்துறை உலகளவில் கவனம் ஈர்த்த முக்கிய நெட்வொர்க்களில் ஒன்றாகும் இந்த நிலையில் அஞ்சல்துறை வங்கிகளை நவீனமயமாக்குவதுடன், பெரிய வங்கியாகவே மாற்ற அஞ்சல்துறை ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டுள்ளது. இதுவரை அதிகாரபூர்வமாக எந்த விண்ணப்பத்தையும் அஞ்சலக வங்கி, ரிசர்வ் வங்கியிடம் முன்வைக்கவில்லை. இதுபற்றி இந்திய அஞ்சலக வங்கியின் தலைவர் வெங்கட்ராமு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். தற்போதுள்ள வங்கி கட்டமைப்புக்கு போட்டியாக தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் நிதி சேவை அளிக்கும் வகையில் முழுநேர வங்கிகளாக அஞ்சலக வங்கிகள் மாற்றப்பட இருக்கின்றன. அஞ்சலக வங்கிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அதனை பெரிய வங்கியாக மாற்ற திட்டம் வகுத்து வருவதாகவும் வெங்கட்ராமு தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சலக வங்கிகளுக்கு இந்தியா முழுவதும் 6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவற்றில் வெறும் 20%மட்டுமே செயல்பாட்டில் இல்லாமல் உள்ளனர். நாடு முழுக்க ஒருலட்சத்து 58ஆயிரம் கிளைகளில் வங்கி சேவைகளையும் அஞ்சலக வங்கிகள் வழங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் பெரிய வங்கியாக அஞ்சலக வங்கிகள் மாற்ற வேண்டுமானால் போதுமான மூலதனம் மற்றும் அதிக அலைவரிசை வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அஞ்சலக வங்கிகள் பெரிய வங்கிகளாக மாற்ற வேண்டுமானால் அதற்கு இன்னும் கால அவகாசம் பிடிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.