டுவிஸ்ட் வச்ச இந்திய பங்குச்சந்தைகள்,!!!
காதலர் தினத்தில் இந்திய பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 61ஆயிரத்து 32 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 158 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 929 புள்ளிகளை வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம் மற்றும் சந்தையில் வேகமாக விற்கும் வீட்டு உபயோக பொருட்கள்துறை மற்றும் நிதித்துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. இந்தியாவில் பணவீக்கம் ஜனவரியில் உயர்ந்துள்ளபோதும், அமெரிக்காவில் பணவீக்கம் சரிந்து வருவதால் அதன் விளைவாக பங்குச்சந்தைகள் வேகமெடுத்துள்ளன. கடந்த சில நாட்களாக சரிந்து வந்த அதானி குழும பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன. ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் மிகப்பெரிய லாபத்தை சந்தித்தன. அப்போலோ மருத்துவமனை,பாரத ஸ்டேட் வங்கியின் காப்பீட்டு பிரிவுகள் சரிவை சந்தித்தன. தங்கமும் பொதுமக்களுக்கு சாதகமாகவே முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் சரிந்தது. 42 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் பிப்ரவரி 13ம் தேதி விலையை விட 5 ரூபாய் குறைந்து 5,330 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. கட்டிவெள்ளி கிலோ 500 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.