IT துறை அபரிமித வளர்ச்சி – NASSCOM அறிக்கை தகவல்..!!
நடப்பு நிதியாண்டில், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை 227 பில்லியன் டாலர்களை எட்டும் என மென்பொருள் துறைகளின் தேசிய சங்கமான NASSCOM அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ITயில் அதிக வேலைவாய்ப்புகள்:
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
NASSCOM அறிக்கை:
ஐடி துறை ஏற்றுமதிகள் (வன்பொருள் உட்பட) 17.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 178 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இந்தியாவின் மொத்த சேவைகள் ஏற்றுமதியில் 51 சதவீத பங்காகும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் ஆன்லைன் மின்வணிகம் 39% வளர்ச்சியைப் பதிவு செய்து 2021-22ல் 79 பில்லியன் டாலரை எட்டியது. டிஜிட்டல் வருவாய் பங்கு 30-32 சதவீதமாக இருந்தது. இது 13 பில்லியன் டாலர் அதிகரித்து வருவாயைப் பதிவு செய்தது.
IT துறையில் வளர்ச்சி:
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களுடன் டிஜிட்டல் திறமைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. மூன்று ஊழியர்களில் ஒருவர் ஏற்கனவே டிஜிட்டல் திறன் பெற்றுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத் திறமையாளர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியனாக உள்ளது. 36 சதவீதத்துக்கும் அதிகமான பெண் ஊழியர்களுடன், இந்திய தொழில்நுட்பத் துறையானது, இந்தியாவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் துறையாக விளங்குகிறது.
2021-ஆம் ஆண்டில் 42 புதிய யூனிகார்ன்கள், 11 ஐபிஓக்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுடன் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் மையமாக இந்தியா தொடர்கிறது. 2021-ஆம் ஆண்டில் 2,250 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் நிறுவப்பட்டன. 24 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது.
இந்தியாவில் 2,000 க்கும் மேற்பட்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் 1,000 SAAS நிறுவனங்கள் முன்னிலையில் மென்பொருள் தயாரிப்புகள் பிரிவில் முதிர்ச்சி அடைந்துள்ளது.