விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் இந்தியர்கள்..
ஒரு கிலோ தக்காளி ஆப்பிள் விலையை விட அதிகம் இருக்கிறதே என்று புலம்பாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அழுத்தம் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை என்பது கணிசமாக உயர்ந்து வருகிறது. தக்காளி, இஞ்சி,மிளகாய்,கத்திரிக்காய்,சீரகம் ஆகியவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் மேலும் பல உணவுப்பொருட்களின் விலை உயரவே அதிக வாய்ப்பிருப்பதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இதனால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். திடீர் வெப்ப அலை மற்றும் பூச்சி தாக்கத்தால் இந்தியாவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.எல் நினோ விளைவாக திடீரென அதிக கனமழை அல்லது அதிக வெயிலும் காணப்படுகிறது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்பது மே மாதத்தில் 4.25%ஆக குறைந்துள்ளது.ஆனால் ஒட்டுமொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் நிறைய மாறுதல்கள் வரும் மாதங்களில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திடீர் கனமழை,திடீர் அதிக வெயில் உள்ளிட்ட இயற்கையான எல்நினோ பாதிப்புகள் 2024-இல் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. துவரம்பருப்பு,உளுந்து, கோதுமை,சர்க்கரை ஏற்றுமதிக்கும் பெரிய கட்டுப்பாடுகளை அரசாங்கள் விதிக்கும் அளவுக்கு சூழல் மாறியிருக்கிறது. கோடைக்காலத்தில் சில இடங்களில் அதிக கனமழையும்,அதிக வெயிலும் தாக்கிய இடங்களில் அரிசியின் விலையானது 26%அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவும் பெரிய அளவில் குறைந்தால் அது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே இந்திய பொருளாதாரம் பெரிய தாக்கத்தை சந்தித்து மெல்ல மீண்டு வரும் சூழலில் கால நிலை மாற்றம் பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காமல் பல நாடுகளும் திண்டாடி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.