அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்!!!
அமெரிக்காவில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டியை மத்திய பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றன. மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் குளோபல் லாஜிக் என்ற அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நித்தேஷ் பங்கா அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் அவர்களுக்கு பதிலாக இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் அதிகரித்துள்ளது என்றார். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தில் 25-35 %இந்தியர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்க இருப்பதாக குளோபல் லாஜிக் நிறுவன சிஇஓ கூறியுள்ளார். அமெரிக்காவில்தான் சிக்கல் நிலவுவதாக கூறும் அவர்,இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பாதிபேர் இந்தியர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2 அல்லது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் இந்த நிறுவனம் விரைவிலேயே அவர்களை டிஜிட்டல் இன்ஜினியர்களாக திறமை படைத்தவர்களாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் அனைத்து பொருட்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைவு என்பதும் முக்கிய அம்சமாக இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. 500 புதிய குளோபல் கெபாசிட்டி மையங்களை இந்தியாவில் நிறுவ உலகநாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில் , இந்தியர்களுக்கு இது பொன்னான நேரம் என்று நித்தேஷ் பங்கா தெரிவித்துள்ளார்.