இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்.. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு ..!!
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 சதவீதம் குறையும் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகைப்பட்ட பொருளாதார கொள்கையால் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு நெருக்கடி ஏற்படும் எனவும் ஐநா அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி அடையும் என முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஐநா அறிக்கை, உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும் என்று தெரிவித்துள்ளது. அதாவது பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு குறைந்து 4.6 சதவீதமாக இருக்கும் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயரும். நிதியில் நிலையற்ற தன்மை உண்டாகும், பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களை இந்திய பொருளாதாரம் சந்திக்கும் என்றும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.