தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பு.. விலை ஏறுனாலும் ஆச விடலையே..!!
2021-ம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து 1,067.72 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக GJEPC எனப்படும் நகை மற்றும் கற்கள் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து GJEPC-யின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது, கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா முழுமையாக முடிவடையாத காலத்திலும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், அதன்படி, 1,067.72 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல்அலையில் ஊரடங்கு காரணமாக, 430.11 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டில் 1.047 டன் தங்கமும், 2017-ம் ஆண்டில் 1.032 டன் தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டன. அதனோடு ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு அதிகம் என்றும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும் கோலின் ஷா தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, 2021-22-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மாதத்துக்கு 76.57 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக அளவில் ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து 469.66 டன் தங்கமும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 120.16 டன்னும், தென்ஆப்பிரிக்க நாட்டிலிருந்து 71.68 டன்னும், கினியாவிலிருந்து 58.72 டன் தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் GJEPC-யின் தலைவர் கோலின் ஷா குறிப்பிட்டுள்ளார்.