பிரிட்டனுக்கு இந்தியா தரும் ஸ்பெஷல் ஆஃபர்…?
உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக இந்தியா திகழ்கிறது. இது உலகின் பல நாடுகளுக்கும் பெரிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது. இந்த நிலையில்தான், இந்தியாவுக்கும்-பிரிட்டனுக்கும் இடையே தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இருநாடுகளுக்கும் பயன்தரும் வகையில் தடையில்லா வணிக ஒப்பந்தம் தயாராகி வருகிறது. அண்மையில் இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் தொலைபேசியில் பேசினர். அப்போது பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யும் மின்சார கார்களுக்கு இறக்குமதி வரியை குறைப்பது பற்றியும் பேசப்பட்டது. இதுவரை, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் கார்களுக்கு 70 முதல் 100%வரை இறக்குமதி வரி விதித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு இறக்குமதி வரியாக 30%குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியாவில் காற்றுமாசும் அதிக அளவில் இருக்கும் நிலையில் மக்கள் மின்சார கார்களுக்கு அதிகம் மாறி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவில் அதிகம் விற்கப்படும் மின்சார காராக டாடா நெக்சான் என்ற மின்சார கார் இருக்கிறது. இது அமெரிக்க மதிப்பில் 18ஆயிரம் டாலர்களாக இருக்கிறது. அதேநேரம் சொகுசு கார்களான ஆடி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட மின்சார கார்களின் மதிப்பு 80 ஆயிரம் டாலர்களாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 49ஆயிரத்து 800 மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன. இது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடைபெற்று வரும் வணிகம் 2030ஆம் ஆண்டிற்குள் தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் மூலம் இரட்டிப்பாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வணிக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் இருநாட்டு தலைவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும். இந்தியாவைவிட்டு வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கு இந்திய அரசு இறக்குமதி வரியாக 15 முதல் 35%ஆக நிர்ணயித்து உள்ளது.இந்த நிலையில் தற்போது அசம்பிள் செய்யப்பட்ட வெளிநாட்டு கார்களுக்கு 30%வரியாக குறைக்கப்படும்பட்சத்தில் இந்தியாவிற்குள் வெளிநாட்டு கார்களின் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.