கருவூலத்தின் கடந்தகால சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இண்டஸ்இண்ட் வங்கி தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது
கருவூலத்தின் கடந்தகால சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இண்டஸ்இண்ட் வங்கி தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது: தலைவர்
கடந்த கால மோசடிகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர, இண்டஸ்இண்ட் வங்கி, கருவூலம், நுண்கடன் துறையில் அடையாளம் காணப்பட்ட பழைய சிக்கல்களைத் தீர்க்க, உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வங்கியின் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு அவர் அனுப்பிய குறிப்பில், “தேவைப்படும் இடங்களில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படுகிறது. மேலும், நிர்வாகக் குழுவுடன் இணைந்து, நம்பிக்கை, இணக்கம், கூட்டுப் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் வாரியம் முழுமையாக ஈடுபட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
“அடையாளம் காணப்பட்ட கருவூலம், நுண்கடன் துறையின் பழைய சிக்கல்களைத் தீர்க்க வங்கி தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், மேம்பட்ட மேற்பார்வை, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால சிக்கல்களின் நிதி தாக்கம் “இப்போது நமக்கு பின்னால் உள்ளது” என்று கூறிய மேத்தா, வங்கி இந்த காலாண்டில் ₹604 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதன் மூலம், கடந்த கால முறைகேடுகளின் தொடர்ச்சி இல்லாமல், நிலையான வருவாய்க்குத் திரும்பியுள்ளது என்று குறிப்பிட்டார்.
“எதிர்காலத்தில், நாங்கள் மேலும் வலுவாகவும், வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் வளர்வதற்கு உறுதிபூண்டுள்ளோம்.
பாதுகாப்பற்ற துறைகளில் கவனமாக இருக்கும் அதே வேளையில், வாகன நிதி, சில்லறைமயமாக்கல், நடுத்தர, சிறிய நிறுவனங்கள், நுண் பொறுப்புகள் போன்றவற்றில் எங்கள் வளர்ச்சி கவனம் செலுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இண்டஸ்இண்ட் வங்கியின் இயக்குநர்கள் குழு, ராஜீவ் ஆனந்தை மூன்று வருட காலத்திற்கு நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அவரது நியமனம் ஆகஸ்ட் 25, 2025 முதல் அமலுக்கு வரும். வங்கி, நிதித் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஆனந்த், சில்லறை, கார்ப்பரேட் வணிகங்களை மேம்படுத்துவதில் வலுவான சாதனைப் பதிவைக் கொண்டுள்ளார்.
மேலும், மூலதன சந்தைகள், கருவூலம். சொத்து மேலாண்மை ஆகியவற்றில் ஆழமான நிபுணத்துவம் பெற்றவர்.
முன்னதாக அவர் ஆக்சிஸ் வங்கியின் துணை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.
