அடுத்து இதற்கு தான் பற்றாக்குறை வரும்
உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ள பொருட்களில் தற்போது அரிசி முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் அரிசிக்கான தட்டுப்பாடு சர்வதேச அளவில் அதிகரிக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இந்தியாவில் ஏற்படும் மழை பற்றாகுறை காரணமாக, அரிசி விவசாயம் குறைத்து வருவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் அரிசி விவசாயம் செய்யப்படும் விவசாய நிலங்களின் அளவு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்தியாவில், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி உற்பத்தி 13 சதவிதம் அளவிற்கு குறைந்துள்ளது. உலக அளவில் மேற்கொள்ளப்படும் அரிசியின் நுகர்வில், இந்தியாவின் பங்கு சுமார் 40 சதவிதமாக உள்ளது. ஏற்கனவே உள்நாட்டில் பற்றாகுறையை கட்டுப்படுத்த சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை உள்ளது.
சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோதுமை போன்ற பொருட்களுக்கான ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டது போல், பணவீக்கம் மற்றும் உற்பத்தி பற்றாகுறை காரணமாக, இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியும் வரும் காலங்களில் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் ஏற்படும் நிலை இருப்பதாகவும், அவ்வாறு நடக்கும் போது, இது சர்வதேச அளவில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசியின் உற்பத்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவிலும் அரிசியின் விலை பன்மடங்கு அதிகரித்து, அது உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலையில் பெரிய மாற்றம் வரும் என தெரிகிறது. அதாவது, ஆயிரம் கிலோ அரிசியின் விலை சுமார், 400 டாலர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து வங்க தேசம், சீனா, நேபால் போன்ற நாடுகளுக்கு பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த ஏற்றுமதி பாதிப்பு அடையாமல் இருக்கவும், இந்தியாவில் அரிசியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும் மத்திய அரசு உடனடியாக, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழ தொடங்கியுள்ளது.