பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறதாம்…!!!
இந்தியாவின் பணவீக்க அளவு என்பது அண்மையில் வெளியிடப்பட்டது. அதாவது இந்தியாவின் பணவீக்கம் 7.44 விழுக்காடாக ஜூலை மாதம் இருந்ததாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.இது படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக நிதித்துறை செயலர் டிவி சோமநாதன் தெரிவித்துள்ளார். சராசரியாக 6.6விழுக்காடாக இந்த பணவீக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் ,ரிசர்வ் வங்கியின் அளவான 2 முதல் 6 விழுக்காடு என்ற அளவை சில்லறை பணவீக்கம் தாண்டியுள்ளது. அதாவது தாங்குக்கூடிய அளவான சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 விழுக்காடு என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே வரையறுத்துள்ளது. கடந்த 5 மாதங்களில் முதல் முறையாக இந்த சில்லறை பண வீக்கம் என்பது கணிசமாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கத்தை குறைக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செய்திருப்பதாக கூறியுள்ள சோமநாதன், அண்மையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ எனப்படும் வட்டி விகிதம் பயன்படுகிறது. இதனை கடந்த 3 மாதங்களாக மாற்றவில்லை என்று கூறியுள்ள சோமநாதன், சீனாவில் நிலவும் மந்த நிலை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 5 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் இன்னும் கூட வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதால் கச்சா எண்ணெய் தேவை இன்னும் கூட சரிய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். அண்மையில் கச்சா எண்ணெய் விலை 9 மாதங்களில் இல்லாத அளவாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் உயர மிகமுக்கிய காரணமாக கருதப்படும் காய்கனி விலைகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் சோமநாதன் தெரிவித்துள்ளார். விரைவில் விலைவாசி மற்றும் பணவீக்கம் கட்டுப்படும் என்றும் கணித்துள்ளார். பருப்பு ,நறுமனப் பொருட்கள்,தானியங்களின் விலைகளும் அண்மையில் அதிகளவில் உயர்ந்திருந்தது. போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் தலையிட்டு இந்த பொருட்களின் அளவுகளை கண்காணித்து வருகிறது. பாஸ்மதி அல்லாத மற்ற ரக அரசிகளுக்கு ஏற்றுமதிக்கு தடை, முகவர்கள் மூலம் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வாங்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட காரணிகளால் மத்திய அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போதுமான திட்டங்களை அதாவது திறந்தவெளி சந்தையில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செய்து போதுமான நவடிக்கைகளை செய்து வருவதாகவும் சோமநாதன் கூறியுள்ளார்.