அலுவலகத்தை மூடும் Infosys.. ஊழியர்களின் கதி என்ன..!?
மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Infosys ரஷ்யாவில் இயங்கி வரும் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உலகின் முன்னணி நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வணிக தொடர்புகளை நிறுத்தியுள்ளன. சில தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், ரஷ்யவில் உள்ள Infosys அலுவலகத்தை மூடுவது குறித்து பல்வேறு அழுத்தங்கள் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இயங்கும் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மாற்று பணியை கண்டறியும் முயற்சியில் இன்ஃபோசிஸ் ஈடுபட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனக், Infosys நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷிதாவை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில், சுமார் 400 மில்லியன் பவுன்ட் அளவுக்கு ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷிதாவுக்கு சொந்தமாக இருக்கிறது. இதன் மூலம், ரஷ்யாவிலிருந்து ஆதாயம் அடைந்து வருவதாக ரிஷி சுனக் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதற்கு ரிஷி சுனக் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிலுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.