2025-இல் இன்ஸ்டன்ட் செட்டில்மண்ட்…
பங்குச்சந்தைகளில் பணம் முதலீடு செய்வது , போட்ட பணத்தை மீண்டும் எடுப்பது உள்ளிட்ட அம்சங்களை ஆவணப்படுத்தி, விதிகளை வகுத்து கண்காணித்து வரும் அமைப்புக்கு செபி என பெயர். இந்த அமைப்பின் தலைவராக மதாபி புரி புச் என்ற பெண் இருக்கிறார். இவர் செபியின் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். முதலீட்டாளர்களின் பணத்தை வைத்து வணிகத்தை மேம்படுத்துவதை எளிமையாக்கும் வகையில் முதலீடு செய்த பணம் தாமதமின்றி கிடைக்க வழிவகை செய்து வருகிறார். இவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மதாபி, வரும் 2024 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் பேமண்ட் கிடைக்கும் வகையில் அதற்கான பணிகளை செய்து வருவதாகவும், அதற்கான திட்டம் தயாராகிவிட்டதாகவும் அறிவித்தார். அதாவது வரும் மார்ச் மாதம் முதல் என்றைக்கு முதலீடு செய்யப்படுகிறதோ அதே நாளில் முதலீடுகளை பெறும் நிறுவனம் பணத்தை பெற்றுக்கொள்ள இயலும், இதேபோல் பங்குகள் மீது ஏதோ ஒரு வகையில் போடப்பட்ட பணமும், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 2025 ஆம் ஆண்டு இன்ஸ்டன்ட்டேனியஸ் எனப்படும் அப்போதே பணம் பெறும் வகையில் திட்டங்கள் தயாராகி வருவதாகவும், இதற்கான பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் கூறினார். இது முழுக்க முழுக்க ஆப்சன்தான் என்று கூறியுள்ள அவர், வழக்கமான பாணியில் பணிகளும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 2023 ஜனவரி முதல் வர்த்தகம் நடந்த அடுத்த வணிக நாளில் பணம் கையில் கிடைக்கும் வகையில் விதிகள் திருத்தி அமலுக்கு வந்துள்ளன. ஒரே நாளில் பணத்தை செட்டில் செய்வது என்பதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்திய ரூபாயாக மாற்ற ஒரு நாளாவது அவகாசம் தேவை என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.