தரமான முதலீடுன்னா, அது தங்கப் பத்திர முதலீடுதாங்க!
இந்தியர்களுக்கும், தங்கத்துக்கு இருக்குற பிணைப்பு சொல்லி மாளாதது. மணமகன் கட்டும் தாலியாகட்டும், காதலி கொடுக்குற மோதிரமாகட்டும், பிள்ளைகள் அப்பா அம்மாவுக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசாகட்டும்… அவசரமா பணம் தேவைப்படும் போது தங்கத்தை வைத்துக் கொண்டு பணம் கொடுக்கிற சேட் ஆகட்டும் எல்லாமே சென்டிமென்ட்டலான விஷயம் தாங்க. இந்தியாவில், தங்கம் பல நேரங்களில் பலரது வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது; கடனில் இருந்து மீட்டிருக்கிறது. அதுனால தங்கத்தைக் கிட்டத்தட்ட ஒரு கடவுளோட வடிவமா பாக்குற நாடு நம்ம நாடு.
தங்கம் ஒரு மாறாத மதிப்புக் கொண்ட பாரம்பரியமான உலோகம்ங்கிறதுனால அது ஒரு முதலீட்டுப் பொருளாகவும் தொன்று தொட்டு செயல்படுதுங்க. இதோட இந்த மாறாத மதிப்பை விளக்க ஒரு எடுத்துக்காட்டு உண்டுங்க. கி.மு ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனை ஆண்ட மன்னன் நெபுசெத் நிஸார் ஒரு பஞ்ச காலத்துல ஒரு அவுன்ஸ் தங்கத்தைக் குடுத்து 400 லோஃப் ப்ரெட் வாங்கினார்ன்னு வரலாறு சொல்லுது. இன்னைக்கி ஒரு அவுன்ஸ் தங்கத்தோட விலை தோராயமா 1,750 அமெரிக்க டாலர்னு வைங்க. தரமான பிரெட் லோஃப்பின் இன்றைய விலை 4 அமெரிக்க டாலர். இப்பவும் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு நீங்க சராசரியா 400 பிரெட் லோஃப் தான் வாங்கலாம். சுமாரா 2,500 ஆண்டுகள் தாண்டியும் ஒரு உலோகத்தோட விலை மாறாம சும்மா கன் மாதிரி இருக்குன்னா அது தங்கம் மட்டும்தாங்க.
தங்கத்துல முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், இந்திய மக்கள் நகைக்கடைல போயி தங்களுக்குப் புடிச்ச நகைய பாத்து பாத்து வாங்குறதுதான் வழக்கம். அதுலயும் பெண்கள், சொல்லவே வேணாம். துணிக்கடைக்குப் போற மாதிரி நகைக்கடைக்கி போகும்போது புளியோதரை கட்டி எடுத்துட்டுப் போக வேண்டியதுதான் மிச்சம். அப்படி இருந்த சூழலை இன்னைக்கி இந்த கொரானா தொற்று நோய் வந்து கண்ணுல விரல் விட்டு ஆட்டிருச்சு. நகைக்கடைகளுக்குப் போக முடியாத சூழல், லாக்டவுன், கட்டுப்பாடுகள், பயம் எல்லாம் சேந்து மக்கள முடக்கி வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிருச்சு.
கொஞ்ச காலமாவே டிஜிட்டல் தங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு காதல், தங்கத்தோட மதிப்பு அப்பிடியே இருக்கும், விலை உயர்வு நிச்சயமா இருக்கும், கடைல நகை வாங்கும்போது இழக்கிற செய்கூலி, சேதாரம் மிச்சம், அதுனால டிஜிட்டல் தங்கம் வாங்குற மக்களோட அளவு கணிசமான அதிகமாயிட்டே போகுது.
அந்த வரிசைல தங்கத்துல முதலீடு செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்திய அரசோட தங்கப்பத்திரங்கள், உலோகத் தங்கத்தோட புழக்கத்தைக் குறைக்கலாம்னு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம், திடீர்னு பாத்தா மக்கள்கிட்ட அமோம வரவேற்பு அடைஞ்சு ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பாவே மாறிடுச்சு.
இந்திய ரிசர்வ் வங்கியின், இந்த தங்கப்பத்திரங்களின் ஐந்தாவது வரிசை – ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகுதுங்க, வழக்கமான பயன்களோட இதுல ஒரு கூடுதல் பெருமை என்னன்னா அரசுக்கு உதவும் ஒரு இறையாண்மையுள்ள முதலீடாகவும் இது பார்க்கப்படுவதுதான்.
ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 வரை இந்தப் பத்திரங்களை நீங்க வாங்கலாம், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும், அப்பறமா, இதோட விலை 4790 ரூபாய்ங்க, நீங்க ஒரு அறக்கட்டளை மூலமாகவோ, இல்ல, உங்க நிறுவனத்தின் மூலமாகவோ வாங்கினால் 20 கிலோ தங்கம் வரைக்கும் வாங்கலாம்.
இந்த தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கு உங்ககிட்ட ஒரு டீமேட் அக்கவுண்ட் இருந்தா போதும், டீமேட் அக்கவுண்ட் இல்லையா, பேங்க் மூலமா, போஸ்ட் ஆபீஸ் மூலமா கூட வாங்கலாம். இந்தியாவோட இரண்டு பங்குச் சந்தையிலையும் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்தப் பத்திரங்களை நீங்க ஒரு பங்கு போல பயன்படுத்தி 5 ஆவது ஆண்டிலிருந்து விற்கலாம், 2.5 சதவிகித வட்டி கிடைக்கும்.
தங்கத்துல செஞ்ச முதலீடு காலகாலத்துக்கும் யாரையும் நஷ்டப்படுத்தினதா வரலாறே இல்லைங்க, காசிருந்தா ஒரு கிலோ வாங்கிப் போடுங்க.