எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு நான்கு மாநிலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு !
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்க மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ட்வீட் வெளியான மறுநாளான ஜனவரி 14ந் தேதி தெலுங்கானா தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கே.டி.ராமராவ் மஸ்க்கை “தெலுங்கானாவில் ஆலை அமைப்பதற்கான சவால்களை சமாளிக்க டெஸ்லாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாநிலம் இந்தியாவில் ஒரு சிறந்த வணிக இலக்காகவும் உள்ளது” என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநில நீர்வள அமைச்சரும் மாநில NCP தலைவருமான ஜெயந்த் பாட்டீல் ” நீங்கள் இந்தியாவில் நிறுவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிராவில் இருந்து உங்களுக்கு வழங்குவோம். மகாராஷ்டிராவில் உங்கள் உற்பத்தி ஆலையை நிறுவ உங்களை அழைக்கிறோம்,” என்று பாட்டீல் எழுதினார்.
இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் இதே கருத்தைத் தெரிவித்தார். ” பஞ்சாப் மாடல், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரித் தொழிலுக்கான மையமாக லூதியானாவை உருவாக்கி, முதலீட்டிற்கான ஒற்றைச் சாளர அனுமதியுடன், பஞ்சாபிற்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும், பசுமையான வேலைகளை உருவாக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் ” என்று மஸ்க்கின் ட்வீட்டுக்கு சித்து பதிலளித்துள்ளார். மேற்கு வங்கமும் இந்தப் பட்டியலில் இருந்து தப்பவில்லை. அதன் மந்திரி எம்.டி குலாம் ரப்பானி ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில், “இங்கே வாருங்கள், மேற்கு வங்கத்தில் எங்களிடம் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது” என்று மஸ்க்கை அழைத்துள்ளார்.
இந்தியாவில் தனது உயர்செயல் திறன் கொண்ட மின்சார கார்களை விற்பனை செய்ய 58 வயதான பில்லியனரான எலான் மஸ்க், இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரி அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். எவ்வாறாயினும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், வரிச் சலுகைகள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் EVகளை உற்பத்தி செய்யத் தொடங்குமாறு மின்சார கார் நிறுவனத்தை கேட்டுக் கொண்டது. சுங்க மதிப்பைப் பொருட்படுத்தாமல் எலெக்ட்ரிக் கார்களுக்கான கட்டணத்தை 40% ஆக தரப்படுத்தவும், அத்தகைய வாகனங்கள் மீதான சமூக நல கூடுதல் கட்டணமான 10% திரும்பப் பெறவும் டெஸ்லா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.