12 ஆம் தேதியே இந்தியாவில் ஐபோன் 15 கிடைத்துவிடுமாம்..!!!
உலகளவில் பல ஆண்டுகளாக ஒரு செல்போன் நிறுவனம் கோலோச்சி வருகிறது என்றால் அது நிச்சயமாக ஐபோனாகத்தான் இருக்கும்.இந்த நிறுவனத்தின் செல்போன்கள் வரும் 12 ஆம் தேதி உலகின் பெரும்பாலான நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.இந்த நிலையில் அதே நாளில் இந்தியாவிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் ஐபோன்கள் உலகின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் துரிதமடைந்துள்ளன. கடந்தாண்டு ஐபோன் 14 அறிமுகப்படுத்தும்போது பெரிய அளவில் காலதாமதமாகத்தான் இந்தியாவில் கிடைத்தன. இந்தாண்டு இந்த பிரச்சனையை சரி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 ஆம் தேதியே ஐபோன்கள் கிடைக்கும் வகையில் இந்தியாவிற்குள் பல்வேறு நகரங்களுக்கும் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இந்தியாவில் பண்டிகை காலம் வர இருக்கும் சூழலில் அதற்கு தகுந்தபடி ஸ்டாக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வரும் டிசம்பருக்கு பிறகு பெரிய அளவில் ஐபோன் ஏற்றுமதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சீனாவில் அசுரவேகத்தில் நடந்துள்ளது.அதே நேரத்தில் இந்தியாவுக்கும் உதிரி பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவிலும் இதே வேகத்தில் தயாரிப்பு மற்றும் அசம்பிளிங் பணிகள் நடைபெற்றன.பாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் 61,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதியை செய்திருக்கின்றன. இந்தியாவில் ஐபோன் 15ஐ பாக்ஸ்கானும், 15 பிளஸ் ரக போனை பெகட்ரானும் தயாரிக்க உள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் இருந்து ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் செல்போன்களின் அளவான 66%-ல் ஐபோன்களின் பங்கு மட்டும் 35%ஆக இருக்கிறது. அமெரிக்கா சீனா இடையே இருந்த மோதலின்போது அமெரிக்க நிறுவனங்கள் சீனாவைத் தாண்டி வேறு எங்கு செல்போன் உற்பத்தியை தொடங்கலாம் என்று எதிர்பார்த்திருந்தபோது இந்தியா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, செல்போன் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளித்துள்ளது.