சைபர் தாக்குதல்களுக்கு இந்தியா தான் இலக்கா ?
உலகளவில் அதிகம் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CloudSEK XVigil report என்ற அறிக்கை இதனை உறுதி செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தாக்குதல்கள் 95% உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா,அமெரிக்கா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளின் அரசு நிறுவனங்களைத் தான் ஹேக்கர்களும்,சைபர் தாக்குதல் நடத்துவோரும் ஹேக் செய்திருப்பதாக அந்த அறிக்கை அதிர வைக்கிறது. உலகளவில் பதிவாகும் சைபர் தாக்குதல்களில் இந்த 4 நாடுகளின் பங்கு மட்டுமே 40% ஆக உள்ளது. இணைய வழி தாக்குதல்கள் அதிகரிக்க பணம் மட்டுமே முக்கிய காரணம் இல்லை என்றும் அரசியல்,மதம்,பொருளாதாரத்தை குறி வைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிய வந்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதை வெளிக்காட்டுவதற்கே இந்த வகை தாக்குதல்களை சிலர் நடத்துவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதேபோல் surfshark என்ற Antivirus நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் சைபர் தாக்குதல் 314% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் அதிக முறை சைபர் தாக்குதலை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் போர்ச்சுகல் முதலிடத்திலும், தாய்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.