இது விப்ரோவுக்கு சோதனை காலமா?
பொதுவாக ஒரு டெக் நிறுவனம் என்றால் அதில் திறமையான பணியாளர்கள் பணிமாற்றம் என்பது நடந்துகொண்டே இருக்கும் ஒருநிகழ்வு, அப்படித்தான் விப்ரோவிலும் நடந்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் விப்ரோவில் இருந்து 1823 பணியாளர்கள் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 744-ல் இருந்து தற்போது 2 லட்சத்து 56 ஆயிரத்து 921 ஆக சரிந்திருக்கிறது. நல்ல பணியாளர்களை இழந்துள்ளபோதும் அட்ரிஷன் எனப்படும் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் என்பது 14.1 விழுக்காடாகவே இருக்கிறது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் டெக் மகேந்திரா நிறுவன அட்ரிஷன் அளவு 15 விழுக்காடாகவும்,இன்போசிஸ் 20.9விழுக்காடு, டிசிஎஸ் 20.1 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. பணியாளர்கள் வெளியேற்றத்தைப் பற்றி பேசியுள்ள விப்ரோ நிறுவன சிஇஓ, விப்ரோ நிறுவன வணிகம் வளர்ந்து வருவதால் புதிய பணியாளர்களை எடுத்துக்கொண்டே இருப்போம் என்றார். பணியாளர்கள் குறிப்பிடத் தகுந்த அளவு வெளியேறினாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். விப்ரோ நிறுவனத்தின் வருவாய் என்பது 23ஆயிரத்து 190 கோடி ரூபாயாக இருக்கிறது.4-ம் காலாண்டு முடிவுகளை அடுத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள விப்ரோ முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபரில் 9,500 கோடி ரூபாய் அளவுக்கு விப்ரோ நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.