அடுத்தாண்டு வருகிறதா ஜெட் ஏர்வேஸ்?
இந்தியாவில் அட்டகாசமான சேவைகளை வழங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் அதீத கடன் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு சேவையை நிறுத்தியது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் மட்டும் 8ஆயிரம் கோடி ரூபாய் கடனை தரவேண்டியுள்ளது. இந்த சூழலில் நிறுவனத்தை இயங்க விடாமல் கடன் கொடுத்தவர்கள் நச்சரித்தனர். இதன் விளைவாக 2020ஆம் ஆண்டு ஜேகேசி(jalan kalrock consortium) என்ற நிறுவனம் ஜெட் ஏர்வேசை இயக்க முன்வந்தது. எனினும் அடுத்தடுத்த முயற்சிகளால் அந்த நிறுவனத்தையும் ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்தவர்கள் இயங்க விடாமல் செய்தனர். இந்த சூழலில் கடன் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டன. இதன்படிகுறிப்பிட்ட சில கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த சூழலில் 250 கோடி ரூபாய் வரை இதுவரை ஜேகேசி நிறுவனம் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறது. மேலும் புதிதாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் மீண்டும் அடுத்தாண்டு இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையாவது செலுத்தவேண்டும் என்ற விதியின்படி கடைசியாக 100 கோடி ரூபாயை ஜேகேசி நிறுவனம் களமிறக்கியுள்ளது. இது தொடர்பாக வரும் 4ஆம் தேதி மீண்டும் ஜேகேசி மற்றும் கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருக்கின்றனர். திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் அடுத்தாண்டு தொடக்கத்திலேயே மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தங்களுக்கு தரவேண்டிய தொகையை செலுத்தாமல் விமானத்தை இயங்க விடமாட்டோம் என்பதில் கடன் கொடுத்தவர்கள் உறுதியாக நிற்கின்றனர். என்ன நடக்கும் என்பதை காத்திருந்தது தான் பார்க்கவேண்டும். எனினும் மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயங்குவது குறித்து ஓரிரு வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.