அறிவிப்பை வெளியிடுகிறாரா மஸ்க்..
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகமாவது தொடர்பாக பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் வரும் 22 ஆம் தேதி அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் கசிந்துள்ளது. இந்தியாவுக்கு வர இருக்கும் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். புதிய ஆலை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அமர்ந்து பேசி அதன்பிறகுதான் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட மின்சார வாகன கொள்கையை மஸ்க் வரவேற்க இருப்பதாகவும் ,இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பது குறித்தும் மஸ்க் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்தாண்டு ஜூனில் அமெரிக்காவில் மஸ்க்கும் பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து டெஸ்லா நிறுவனம் குறித்தும், இந்தியாவில் மின்சார கார்களுக்கு இறக்குமதி வரி குறைப்பது குறித்தும் பேசியிருந்தனர். 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடும், இந்தியாவில் ஆலைகளும் அமைத்தால் அந்நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 100-ல் இருந்து 15 விழுக்காடாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. வரும் 19 ஆம் தேதி முதல் இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. இந்த நிலையில்தான் மஸ்க் வரும் 21 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். பிரதமர் மோடியுடன் 22 ஆம் தேதி சந்தித்து பேச இருக்கிறார். இந்தியாவில் 20-25லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார கார்களை டெஸ்லா தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சாலைகளுக்கு தகுந்தபடி ஜெர்மனியில் டெஸ்லா கார்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்தியாவில் மின்சார கார்கள் சந்தை மிகவும் குறைவாக 2விழுக்காடாக இருந்தாலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறையில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் மின்சார கார்கள் விற்பனையை 30 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது