இந்த திட்டத்தை இந்தியாவில் கொண்டு வருகிறதா செபி?
ஒரு பெரிய நிறுவனத்தின் மிக சொற்ப பங்குகளை மக்கள் வாங்கிக்கொள்ளும் வசதிக்கு பெயர்தான் fractional ownership. எளிமையாக சொல்ல வேண்டுமெனில் உதாரணமாக MRF நிறுவனத்தின் ஒரு பங்கு 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதில் 4-ல் ஒரு பங்காக அதாவது 25,000 ரூபாய் மட்டும் ஒருவரால் முதலீடு செய்ய முடிந்தால் அவர்தான் fractional owner. இந்த வகை புதிய திட்டத்தை இந்திய சந்தைகளில் கொண்டுவர செபி திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் 20,000ரூபாய்க்கும் அதிகமான பங்குகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பேஜ் இண்டஸ்ட்ரீஸ்(Rs.39,612), ஹனிவெல்ஆட்டோமேஷன் இந்தியா -39,308, ஸ்ரீ சிமெண்ட், நெஸ்ட்லே இந்தியா போன்ற நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகும். இந்த வகை புதிய முதலீட்டு வாய்ப்பு ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது. அங்குள்ள ஆப்பிள்,மெட்டா,ஆல்பபெட் நிறுவன பங்குகளை இந்திய முதலீட்டாளர்கள் வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த புதிய முதலீட்டு வாய்ப்பு குறித்து செபியின் தலைவர் மதாபி புரிபுச் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த யோசனை சிறப்பாக இருப்பதாக பாராட்டிய அவர்,இந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டுமானால் தற்போதுள்ள செபி விதிகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.புதிய முதலீட்டு முறை அமலுக்கு வந்தால் அது பங்குச்சந்தையில் மேலும் அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ரியல் எஸ்டேட் பங்குகளில் இப்போதே இதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் இதனை மற்ற துறைகளுக்கும் கொண்டுவந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த திட்டத்துக்கு நிபுணர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.