இந்தியாவை சமாதானப்படுத்துகிறதா IMF?
இந்த உலகம் வெறும் நாடுகளால் மட்டும் பிரிக்கப்படுவதில்லை உணவுப் பழக்கவழக்கத்தாலும் வேறுபடுகிறது. ஆனால் ஒரே வகையான பழக்கவழக்கம் கொண்ட நாடுகள் ஏராளம்.ஏன் இந்த தத்துவம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.நேரடியாக விஷயத்தையே சொல்கிறோம் படியுங்கள்.. பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு அண்மையில் இந்தியா தடைவிதித்தது.இதனால் உலகளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றம் நடக்கும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் இந்தியாவை நினைவூட்டியுள்ளது. எதிர்வரும் பண்டிகைகாலத்தில் இந்தியாவில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை சமாளிக்கவும்தான் இந்தியா இதை செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது பற்றி ஐஎம்எஃப் அமைப்பின் மூத்த பொருளாதார நிபுணரும்,ஆய்வாளருமான Pierre-Olivier Gourinchas தனது கருத்தை தெரிவித்துள்ளார். அரிசி விலை ஏற்றம் உலகளவில் அதிகரிக்கும் என்பதால் இந்தியா கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று தாங்கள் ஊக்கப்படுத்துவதாக ஐஎம்எஃப் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து கடந்தாண்டு மட்டும் 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி நடந்துள்ளது. இது அதற்கு முன் ஆண்டைவிட அதிகமாகும் ,அதாவது 2021-ல் வெறும் 2.62 மில்லியன் டாலர் அளவுக்கான அரிசி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்கா,தாய்லாந்து,இத்தாலி,ஸ்பெயின்,இலங்கை ஆகிய நாடுகளுக்குத்தான் இந்தியா பாஸ்மதி அல்லாத மற்ற ரக அரிசிகளை ஏற்றுமதி செய்து வந்தது. 2024-இல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6.1%வரை உயரும் என்று கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5.9% ஆக இருக்கும் என்று சொல்லி இருந்தது. அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொரு நிபுணரான Daniel Leigh, உலகளவில் பணவீக்கம் என்பது தொடர்ந்து மெல்ல மெல்ல சரிந்து வருகிறது என்றார். இந்தியா தனது நாட்டு மக்களின் தேவைக்காக எடுத்து வைக்கும் அரிசி என்பது நல்லவிஷயம்தான் என்றாலும் உலகளவில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உணவுப்பொருட்களின் விலையையும் பெரிதாக உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் அவர் பாராட்டியுள்ளார். முதலீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு உகந்த வகையில் இந்த கட்டமைப்பு உள்ளதாக டேனியல் தெரிவித்துள்ளார்.