வட்டிக்கு வட்டி முறை ரத்தா?
கடனை வாங்கிய நபர்கள், திரும்ப செலுத்தாதபட்சத்தில் அவர்களுக்கு வட்டி எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி அண்மையில் விதிகளை வகுத்து இருந்தது. இந்த நிலையில் புதிய விதிகளின்படி, எவ்வளவு வட்டி விதிக்கலாம் என்பதை அமல்படுத்த வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அவகாசம் நீட்டித்து உள்ளது. வழக்கமாக இந்தாண்டு இறுதி வரை மட்டுமே அதற்கான அவகசாம் இருந்த நிலையில், இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எப்படி கடன்களுக்கு வட்டி வசூலிக்க வேண்டும் என்பது பற்றி, புதிய விதிகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தெளிவுகள் சில வங்கிகள் பெறவேண்டியிருப்பதால், இதற்காக 3 மாதங்கள் அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி புத்தாண்டுக்கு பதிலாக நிதியாண்டின் முதல் நாளில் இருந்து, புதிய விதி அமலாக இருக்கிறது. இதனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பெறப்படும் புதிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கக்கூடாது என்றும், ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய நடைமுறைப்படியே, கடன்களுக்கு வட்டி வசூலிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் கடன் பெற்று, வட்டியை திரும்ப செலுத்தவில்லை என்றால், அவரிடம் இருந்து, அபராத தொகைதான் வசூலிக்க வேண்டுமே தவிர்த்து, அபராத வட்டி வசூலிக்கக் கூடாது என்கிறது ரிசர்வ் வங்கி. விதிகளை கடன் வாங்கியவர் பின்பற்றாதபட்சத்தில், எவ்வளவு அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்று வங்கிகள் வாடிக்கையாளருக்கு, தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கூடுதல் வட்டி விதிக்கப்படுவதால் அது தேவையில்லாத பிரச்னைகளையும், சண்டை சச்சரவுகளையும் தான் ஏற்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.