சரிகிறதா தகவல் தொழில்நுட்பத் துறை?
தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கள் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதை பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சரிவை கண்டு வருவது போல தோன்றுகிறது.இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸின் முதல் காலாண்டு முடிவுகளை பார்த்தால் 16.8% லாபம் கிடைத்திருக்கிறது. இது கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 2.7%குறைவாகும். டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை என்பது 17.8% ஆக உள்ளது. இது கவலை அளிக்கும் அம்சமாகும்.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக உள்ளவர் கீர்த்தி வாசன். இவர் இதுகுறித்து பேசியுள்ள விஷயம் என்னவென்றால், வரும் நாட்களில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளார். தற்போது அதிகமாக இருக்கும் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் விரைவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 523 புதிய பணியாளர்களை காலாண்டில் டிசிஎஸ் இணைத்திருப்பதாக கூறிய அவர்,விரைவில் டிசிஎஸ் நிறுவனம் உத்வேகம் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் நிறுவனம், தனது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் 7.6% வளர்ச்சி அடைந்துள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் லாபம் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 11.2% வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால்,அந்நிறுவனம் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. வழக்கமாக ஜூலையில் மூத்த நிர்வாகிகளுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் ஆனால் இதுவரை பேச்சு மூச்சே இல்லாமல் அந்நிறுவனம் இருக்கிறது. சம்பள உயர்வு வரவில்லை என்பதற்கு எந்த காரணங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதில் இன்போசிஸ் நிறுவனத்தை அப்படியே காப்பியடிக்கிறது எச்சிஎல் நிறுவனம். ஆனால் சம்பள உயர்வு தொடர்பாக அடுத்த காலாண்டில் முடிவெடுக்க உள்ளதாக எச்சிஎல் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அளித்துவிட்டது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வருகையால்,பலருக்கு வேலை போய்விட்டது. பலரை நிறுவனங்களே வீட்டுக்கு அனுப்பி விட்டது. இதுபோன்ற நிலை, வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவுக்கு தற்போது தேவையற்ற ஒன்று. 1980,90 களில் வேலையில்லா திண்டாட்டம் பெரிய பிரச்னையாக இருந்தது. 1990களுக்கு பிறகுதான் தகவல் தொழில்நுட்பத்துறை பெரிய வளர்ச்சி அடைந்தது. அந்த காலகட்டத்தில்தான் டிசிஎஸ்,எச்சிஎல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்தனர்.
நிலைமை இப்படி இருக்கையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பொறியாளர்களும்,இளைஞர்களுடன் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தால் இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து நாட்டுக்கே பெரிய சிக்கலை தரவும் வாய்ப்புள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஐடி நிறுவனங்கள் வழங்கி,அவர்களுக்கு பயிற்சியும் அளித்தது. தற்போது அந்த நிலை படிப்படியாக குறைந்து வருகிறது. பொறியியல் படித்தவர்களுக்கு ஐடி நிறுவனங்களில் வேலை கிடைப்பதும் பெருமளவு குறைந்திருக்கிறது.
வெறும் பட்டம் மட்டும் பெற்றிருக்கும் பணியாளர்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைக்காக எடுப்பதில்லை. திறமைகளை கொண்ட,,கூடுதல் அறிவுள்ளவர்களைத்தான் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கின்றனர். சில நிறுவனங்களில், வேலைக்கு இவ்வளவு சம்பளம் என்று எடுத்துவிட்டு,அதனை பாதியாக குறைக்கும் சூழலும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்த இருக்கும் இந்த சூழலில் புதிதாக படித்து முடித்துவிட்டு வரும் இளைஞர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வருங்காலங்களுக்கு தேவை ஏற்படும் துறைகளை தேர்வு செய்து.திறமைகளை வளர்ப்பதை இளைஞர்கள் செய்ய வேண்டும்.