IIT-ல் படித்தவர்களுக்கே இந்த நிலையா?
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருப்பதன் காரணமாக பல்வேறு முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்வதுடன், புதிதாக ஆட்களை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்
இந்த நிலையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோரை வீட்டுக்கு அனுப்பி அமேசான் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வேலைக்கு என்று ஐஐடி, என்ஐடி போன்ற உயரிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வேலை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விப்ரோ,இன்போசிஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் கல்லூரிகளுக்கு சென்று அவர்களுக்கு வேலைக்கு ஆட்களை எடுத்துவிட்டு, உரிய காலத்துக்கு பிறகும் பணி வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. இதில் சில பணியாளர்களுக்கு வேலையே இல்லை என்றும் அந்த டெக் நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. இந்த நிலையில்தான் அமேசானும் இதே பாணியில் காய்களை நகர்த்தி வருகிறது. மும்பை ஐஐடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வேலை உறுதி என்று வாக்குறுதி அளித்த அமேசான் நிறுவனம், 3,4 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் இன்னும் அவருக்கு பணி வழங்கவே இல்லை. வரும் ஜனவரி வரை புதிய பணியாளர்களை சேர்ப்பதை அமேசான் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. படித்து முடித்து பெரிய நிறுவனங்களில் வேலை, கைநிறைய சம்பளம் என்று கனவுகளோடு படித்து முடித்த இளைஞர்களின் கனவுகள் தவிடுபொடியாகிவிடுவதால் பல இளைஞர்கள் மன வேதனையில் இருக்கின்றனர். நீங்கள் விளையாட நாங்கள்தான் கிடைத்தோமா என்றும் சிலர் புலம்பியும் வருகின்றனர்.