படாதபாடு படும் ஐடி நிறுவனங்கள்..
கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றி பழக்கப்பட்ட பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வர வழைக்க டெக் நிறுவனங்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். பணிச்சூழலை மேம்படுத்த அலுவலகத்துக்கு வந்தே ஆகவேண்டும் என்று டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை கசக்கி புழிந்து வருகின்றனர். காக்னிசன்ட் நிறுவனத்தில், பணி தேவைக்கு ஏற்ப ஷிப்ட்களில் மாற்றிக்கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் வாரத்தில் 3 நாட்களாவது பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர அந்நிறுவனம் அனுமதித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வழங்கும் காலாண்டு சம்பள உயர்வை மாற்றி அமைத்துள்ளது. 60 விழுக்காடுக்கு குறைவாக அலுவலகம் வருவோருக்கு மாறுபடும் சம்பளமே கிடையாது என்றும் 60-75 விழுக்காடு அலுவலகம் செல்லும் பணியாளர்களுக்கு அதில் பாதி மட்டுமே அளிக்கப்படுகிறது. இதேபோல் டெல் நிறுவன பணியாளர்களுக்கு மின்சார பேட்ஜ் ஸ்வைப் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பணியாளர்களின் அலுவலக வருகை தெளிவாக கண்காணிக்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் மாதத்தில் 11 நாட்கள் வரை கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அதீத சலுகைகளை வாரி வழங்கிய டெக் நிறுவனங்கள், தற்போது பிடியை இறுக்கி வருவது டெக் பணியாளர்களில் ஒரு பிரிவினரை சங்கடம் அடையச் செய்திருக்கிறது.