வசூலை குவிக்கும் ஐடிசி நிறுவனம்
இந்தியாவில் 25 பிராண்டுகள் மூலமாக ஓராண்டில் 32,500 கோடி ரூபாயை ஐடிசி நிறுவனம் வசூலித்துள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை வருங்காலத்துக்கு ஏற்ப அளித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் 25 கோடி குடும்பங்களுடன் இணைந்துள்ளதாகவும் ஐடிசி கூறியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ஐடிசி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதன் அடிப்படையில் ஆஷிர்வாத், சன்ஃபீஸ்ட், இப்பீ உள்ளிட்ட பிராண்டுகள் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2024 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனம் 20,966 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட 9.6 விழுக்காடு அதிகமாகும். இந்த நிறுவனத்தின் சிகரெட் வணிகத்தில் மட்டும் கடந்தாண்டு 30,596 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. இதேபோல் ஐடிசி ஹோட்டல்கள் நிறுவனமும் வரவேற்பை பெற்றுள்ளது. 6 வெவ்வேறு பெயர்களில் ஐடிசி நிறுவனத்துக்கு 130 இடங்களில் ஹோட்டல்கள் உள்ளன. ஐடிசி நிறுவனம் அண்மையில்தான் இலங்கையில் ஐடிசி ரத்னடிபா என்ற புதிய ஹோட்டலையும் தொடங்கியுள்ளது. இது அந்நிறுவனம் செய்யும் முதல் வெளிநாட்டு முதலீடாகும். பிராண்டுகள் வளர்ச்சியும், ஆரோக்கியமான வணிகத்தையும் பெற்று வருவதாக ஐடிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.